நம் வாழ்வில் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளை அழித்தொழிப்பார் நரசிங்கப் பெருமாள்

0
365

மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில், நரசிம்ம அவதாரமும் ஒன்று. அதேபோல் மற்றைய அவதாரங்களுக்கும் நரசிம்ம அவதாரத்துக்கும் உள்ள வித்தியாசம், இருப்பதிலேயே மிகக்குறைந்த பொழுதுகளே ஆன அவதாரம்… நரசிம்ம அவதாரம்.

நல்லது நடக்க நரசிம்மர், அல்லவை விலக்க நரசிம்மர் என்பார்கள். மனித உடலும் சிங்க முகமும் கொண்டு உக்கிர மூர்த்தியாக காட்சி தரும் நரசிம்மருக்கு பல க்ஷேத்திரங்கள் உள்ளன. நரசிம்ம மூர்த்தியை தொடர்ந்து புதன் கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் வழிபட்டு வந்தால், நம் வாழ்வின் கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்புகளையும் அழித்தொழிப்பார் நரசிங்கப் பெருமாள் என்பது ஐதீகம்.

இரணியனை வதம் செய்வதற்காகவும் பிரகலாதனின் பக்தியை உலகுக்கு உணர்த்தவும் எடுத்த அவதாரமே நரசிம்ம மூர்த்தி அவதாரம். எதிர்ப்புகளையும் இன்னல்களையும் அழித்தொழிப்பவர் நரசிம்மர் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்.

உக்கிர மூர்த்தியாகத் திகழும் நரசிம்மரை எவரொருவர் தொடர்ந்து ஆராதனைகள் செய்து வழிபட்டு வருகிறார்களோ அவர்களை தீயசக்திகள் அண்டாமல் காத்தருள்வார் என்பது ஐதீகம். தொடர்ந்து நரசிம்மரை வழிபட்டு பிரார்த்தித்து வந்தால், எதிரிகள் பலமிழப்பார்கள். எதிர்ப்பே இல்லாமல் போகும்.

’எதைச் செஞ்சாலும் தடையாவே இருந்துக்கிட்டு இருக்குதே’ என்று புலம்பி வருந்தாதவர்களே இல்லை. வீடு கட்டி பாதியில் தடை ஏற்பட்டு அப்படியே போட்டது போட்டபடி இருக்கிறதே’ என்று கவலைப்படுவார்கள் சிலர். ‘எந்தத் தொழில் செய்தாலும் ஜாண் ஏறினால் முழம் சறுக்குகிறதே’ என்று தவித்து மருகுவார்கள் சிலர். ‘படிப்புக்கேத்த வேலை இல்லை, வேலைக்கேத்த சம்பளம் இல்லை’ என்று கலங்குவார்கள் சிலர்.

இப்படியாக வாழ்வில் எந்தத் தடை ஏற்பட்டிருந்தாலும் தொடர்ந்து நரசிம்ம மூர்த்தியை தரிசிப்பதும் வழிபாடுகள் செய்வதும் மகத்தான மாற்றங்களைத் தரும், வாழ்வில் ஏற்றங்களைக் கொடுக்கும். நம்மை எதிரிகளின் கண்முன்னே சிறப்புற வாழச் செய்வார் நரசிம்மர் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.