குளிர்காலத்தில் உங்கள் உடல் எடை அதிகரிக்கும்.. ஏன் தெரியுமா?

0
936

குளிர்காலத்தில் நமது உடல் எடை வழக்கத்தை விட சற்று அதிகரித்துவிடும். மற்ற பருவ காலங்களை விட சர்க்கரை, நெய், வெண்ணெய் சேர்க்கப்பட்ட பல காரங்களை அதிகமாக சாப்பிட விரும்புவதும், உடற்பயிற்சிகள் செய்வதற்கு சோம்பேறித்தனம் கொள்வதும், அதிகமாக சாப்பிடுவதும், அதற்கு இணையாக இல்லாமல் குறைவான அளவில் கலோரிகள் எரிக்கப்படுவதும் உடல் எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

குளிர்காலத்தில் உடல் குளிர்ச்சியடைவதால் உடலில் வெப்பத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக நிறைய பேர் சூடாக சாப்பிட விரும்புவார்கள். அப்படி சாப்பிடும் உணவுகள், பலகாரங்களில் இனிப்புதான் அதிகமாக சேர்ந்திருக்கும். இனிப்புகளில் அதிக கலோரிகள் நிரம்பியிருக்கும். அவை உடல் வெப்பத்தை அதிகப்படுத்த துணைபுரியும். ஆனால் அதற்கேற்ப உடலில் கலோரிகள் எரிக்கப்படாததால் உடல் எடை அதிகரிக்க தொடங்கும்.

குளிர்காலத்தில் விடிந்த பின்பும் போர்வைக்குள் முடங்கி கிடப்பதற்குத்தான் நிறைய பேர் விரும்புவார்கள். வழக்கத்தை விட சற்று கூடுதல் நேரம் தூங்கவும் விரும்புவார்கள். குளிர் காலத்தில் கரடிகளை போலவே மனிதர்களும் கலோரிகளை உடலில் சேர்த்துவைப்பதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். அதை உறுதிபடுத்தும் விதமாக பெரும்பாலானோர் வழக்கத்தை விட குளிர்காலத்தில் 200 கலோரிகள் அதிகமாக உட்கொள்ளவும் செய்கிறார்கள்.

அதிகாலைவேளையில் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருப்பவர்கள், ஜிம்முக்கு செல்பவர்கள் கூட குளிர்காலத்தில் படுக்கையில் இருந்து எழுந்திருப்பதற்கு சோம்பேறித்தனம் கொள்வார்கள். தாமதமாக எழுவதும், உடல் இயக்க செயல்பாடு குறைந்து போவதும் எடை அதிகரிப்பதற்கு காரணமாகிவிடுகிறது.

குளிர்காலத்தில் சூரிய கதிர்கள் உடலின் மீது குறைவாகவே விழும். சூரிய ஒளி குறைந்துபோவதால் சில ஹார்மோன் சுரப்புகளில் மாற்றம் ஏற்படுகிறது. அதன் காரணமாக எல்லா நேரத்திலும் தூக்க உணர்வு எட்டிப்பார்க்கும். மேலும் உடலில் மெலடோனின் ஹார்மோன் அளவு அதிகரிப்பது பசியை தூண்டி அதிகமாக சாப்பிட வைக்கும். அதுவும் எடை அதிகரிப்புக்கு வழிவகுத்துவிடும்.

குளிர்காலத்தில் வளர்சிதை மாற்ற விகிதமும் அதிகரிக்கும். உடலில் வெப்பநிலையை அதிகப்படுத்தும்விதமாக அதன் செயல்பாடு அமைந்திருக்கும். வளர்சிதை மாற்றம் அதிகரிப்பதற்கு அதிக உணவு தேவை. அதனால் குளிர்காலத்தில் கலோரி குறைவான உணவு வகைகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.

குளிர்காலத்தில் எடை அதிகரிப்பதை தவிர்ப்பதற்கு சூப் உள்ளிட்ட திரவ உணவு வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும்.

ஒரே இடத்தில் அதிக நேரம் உட்காருவதையும் தவிர்க்க வேண்டும். அவ்வப்போது எழுந்து நடமாடி உடல் இயக்க செயல்பாட்டை அதிகப்படுத்த வேண்டும்.

காலை நேரம் மட்டுமின்றி ஓய்வு கிடைக்கும் நேரங்களிலும் சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.