சீரக தண்ணீர் குடித்தால் இந்த நோய்கள் வராது

0
516

இளைஞர்களின் உணவு பழக்கம் ரொம்பவே மாறிவிட்டது. துரித உணவுகள், எண்ணெய் பலகாரங்களை விரும்பி சாப்பிடுகிறார்கள். அதேசமயம், நேரம் தவறியும் சாப்பிடும் பழக்கத்தை பழகியிருக்கிறார்கள். காலை உணவை பகல் 11 மணிக்கும், மதிய உணவை 3.30 மணிக்கும், இரவு உணவை நடுராத்திரியிலும் சாப்பிடுகிறார்கள். இந்த முறையில்லாத உணவு பழக்கத்தினால், இளைஞர்கள் பல உடல் உபாதைகளை சந்திக்கிறார்கள். இத்தகைய இளைஞர்கள், சீரக தண்ணீர் பருகும் பழக்கத்தையும் பழகிக்கொள்ளவேண்டும். ஏனெனில் சீரக தண்ணீரை தொடர்ந்து பருகுவதால், பல்வேறு உடல்நல பிரச்சனைகளை போக்கிவிடலாம். அது வயிற்று ஆரோக்கியத்துக்கும் நலம் சேர்க்கும்.

துரித உணவுகளால் ஏற்படும் அஜீரண கோளாறு, அசிடிட்டி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் வராமலும் தற்காத்துக்கொள்ள உதவும். சீரக தண்ணீர் சிறந்த வலி நிவாரணியாக செயல்படும். வயிற்று வலிக்கு நிவாரணம் தரும்.

வெறும் வயிற்றில் சீரக தண்ணீரை பருகி வந்தால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தலாம். சீரக தண்ணீரில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அது உடல் இயக்க செயல்பாட்டிற்கு துணைபுரியும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு அமைப்பை பலப்படுத்தவும் உதவும். பல்வேறு வகையான நோய் தொற்றுகளில் இருந்தும் தற்காத்துக்கொள்ள முடியும். கொரோனா அச்சுறுத்தலில் மிக முக்கியமானதான சுவாச அமைப்பு சீராக செயல்படுவதற்கும் உதவுகிறது.

காலையில் ஒரு டம்ளர் சீரக தண்ணீர் பருகிவந்தால் சுவாசம் சார்ந்த பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். சீரக தண்ணீர் கல்லீரலுக்கும் நல்லது. உடலில் உள்ள தேவையற்ற நச்சுகளை வெளியேற்ற உதவும். இளம் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கு அருமருந்தாகவும் அமையும்.

சீரகத்தில் பொட்டாசியம், கால்சியம், செலினியம், மெக்னீசியம், இரும்பு சத்து, நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. அவை சரும ஆரோக்கியத்தை பளிச்சிடவைக்கும். சீரகத்தில் இருக்கும் வைட்டமின்-ஈ, முகத்தில் சுருக்கங்கள் வராமல் தடுக்கும். சீரகத்தில் இருக்கும் சத்துக்கள் கூந்தலின் ஆரோக்கியத்திற்கும் துணை புரியும்.

பிறகு என்ன..? கொதிக்கும் நீரில் சிறிதளவு சீரகத்தை போட்டு வடிகட்டி பருகுங்கள். ஆரோக்கிய பலன்களை பெறுங்கள்.