கணவன்-மனைவி உறவும், அன்பும்

0
1456

இயேசுவை இறைமகனாக ஏற்றுக்கொண்டு, அவரது நெறிகளைப் பரப்பியவர் புனித பவுல். இவர் இயேசுவின் 12 சீடர்களில் ஒருவர் அல்ல. ஆனால், தலைசிறந்த அப்போஸ்தலராக ஏற்றுக்கொள்ளப்பட்டவர். திருமறை பரப்பும் பணியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு பவுல் எழுதிய திருமடல்கள், விவிலியத்தின் புதிய ஏற்பாட்டை மேலும் செழுமைப்படுத்தியிருக்கின்றன. அந்த வரிசையில் எபேசிய மக்களுக்கு பவுல் எழுதிய திருமடலில், கணவன்-மனைவி இடையிலான உறவு குறித்து, அவர் குறிப்பிட்டிருக்கும் தீர்க்கமான கருத்துகள் குடும்ப அமைப்பையும், குடும்ப உறவையும் வலுப்படுத்தக்கூடியவை. அவற்றைப் புதிய ஏற்பாட்டில், எபேசியர் புத்தகத்தில் அதிகாரம் 5-ல் 23 முதல் 33 வரையிலான வசனங்களில் வாசித்துப் பாருங்கள்.

“கணவர்களே… மனைவிகளே… இறைமகன் இயேசுவுக்குப் பயந்து, ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு நடங்கள். மனைவிகளே… நம்முடைய எஜமானுக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதுபோல், உங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடங்கள். ஏனென்றால், கிறிஸ்து இயேசு நம் சபைக்குத் தலையாக இருப்பதுபோல், மனைவிக்குத் தலைவனாக கணவன் இருக்கிறான். கிறிஸ்து தன்னுடைய உடலாகிய சபையின் மீட்பராக இருக்கிறார். கிறிஸ்துவுக்கு சபை கட்டுப்பட்டு நடப்பதுபோல், மனைவிகளும் தங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.”

கணவர்களே… சபைக்காக கிறிஸ்து தன்னையே கொடுத்து அதன்மீது அன்பு காட்டியதுபோல, நீங்களும் உங்கள் மனைவி மீது தொடர்ந்து அன்பு காட்டுங்கள். அவளது வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். கடவுளுடைய வார்த்தையாகிய தண்ணீரால் சபையை சுத்தப்படுத்திப் புனிதமாக்குவதற்காக இயேசு அப்படிச் செய்தார். எந்தவொரு கறையோ எந்தவொரு குறையோ இல்லாமல் பரிசுத்தமான, களங்கமில்லாத சபையாக அது தனக்கு முன்னால் பிரகாசிக்க வேண்டும் என்பதற்காக அப்படிச் செய்தார்.

குடும்பமும் அதைப் போன்றதே. கணவர்களும் தங்கள் சொந்த உடல் மீது அன்பு காட்டுவதுபோல் தங்கள் மனைவி மீதும் அன்பு காட்ட வேண்டும். தன் மனைவி மீது அன்பு காட்டுகிறவன் தன் மீதே அன்பு காட்டுகிறான். ஒருவனும் தன் உடலை வெறுக்க மாட்டான், அதைக் கவனித்துக்கொண்டு நெஞ்சார நேசிப்பான். கிறிஸ்துவும் இப்படித்தான் சபையை நேசிக்கிறார். ஏனென்றால், நாம் அவருடைய உடலின் உறுப்புகளாக இருக்கிறோம். ‘இதன் காரணமாக, மனிதன் தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் விட்டு தன் மனைவியோடு சேர்ந்திருப்பான்; அவர்கள் இரண்டு பேரும் ஒரே உடலாக இருப்பார்கள்’ என்ற திருமணச் சட்டத்தின் பரிசுத்த ரகசியம் மகத்தானது” என்று பவுல் குறிப்பிடுகிறார்.

கணவன்-மனைவியின் பரிசுத்தமான உறவே குடும்பம் எனும் அமைப்பை வலுவாக்குகிறது. இந்த உறவும், நம்பிக்கையும் உடையும்போது குடும்ப அமைப்பும் உடைந்துபோகிறது. கணவன்-மனைவி உறவில் சிக்கல் தோன்ற பல்வேறு காரணங்கள் இருந்தாலும் உடல்ரீதியான பந்தமும், மனரீதியான நம்பிக்கையும் மிக முக்கியமானவை என்பதை (மத்தேயு 5:27-32) இயேசு எடுத்துக்காட்டுகிறார்.

இயேசு மக்கள் கூட்டத்தைப் பார்த்து பேசும்போது… “மணத்துணைக்குத் துரோகம் செய்யக் கூடாது என்று சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், ஒரு பெண்ணை பாலியல் இச்சையோடு பார்த்துக்கொண்டே இருப்பவன், அவளோடு ஏற்கனவே தன் உள்ளத்தில் முறைகேடான உறவுகொண்டுவிடுகிறான். உன் வலது கண் உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதைப் பிடுங்கி எறிந்துவிடு. உன் முழு உடலும் நரகத்தில் வீசப்படுவதைவிட உன் உறுப்புகளில் ஒன்றை இழப்பதே மேல்.”

இயேசுவின் வார்த்தைகளில், குற்றங்களின் தொடக்கம் அலைபாயும் கண்கள் வழியே நிகழும் என்பதை குறிப்பிட்டுக் காட்டுகிறார். ஆணோ-பெண்ணோ பிறரைப் பாலியல் இச்சையுடன் பார்ப்பதை அடியோடு களைந்தெறிய வேண்டும் என்கிறார் இயேசு. மீறிப் பார்க்கும்போது பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவே கடவுள் உங்கள் கணக்கில் பாவத்தை சேர்த்துக்கொள்கிறார்.