தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்தது!

0
483

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா 2-வது அலை பரவத் தொடங்கியது.

இதன் பின்னர் ஏப்ரல் தேர்தல் நடைபெற்ற நிலையில் நோயின் தாக்கம் மேலும் அதிகரித்தது.

கடந்த 12-ந்தேதி அன்று தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து இருந்தது. இதன் பிறகு நோயின் தாக்கம் அனைத்து மாவட்டங்களிலும் அதிகரித்துக் கொண்டே சென்றது.

இந்த தினசரி பாதிப்பு கடந்த 20-ந்தேதி அன்று 35 ஆயிரத்தை கடந்தது. அன்று 35,579 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது. அதற்கு மறுநாள் (21-ந்தேதி) 36,194 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது. இதுவே அதிகபட்ச தினசரி பாதிப்பாகும்.

இந்த நிலையில் கடந்த 24-ந்தேதியில் இருந்து தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக 26-ந்தேதியில் இருந்து நோயின் தாக்கம் படிப்படியாக குறைய தொடங்கியது.

அடுத்தடுத்த நாட்களில் முழு ஊரடங்குக்கு நல்ல பலன் கிடைத்தது. இதன் காரணமாக 18 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு 30 ஆயிரமாக குறைந்தது.

சென்னையில் கடந்த 27-ந்தேதி முதல் நோயின் தாக்கம் குறைந்து வருகிறது. அன்று 2,779 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். 28-ந்தேதி இந்த பாதிப்பு 2,762 ஆக குறைந்து இருந்தது.

அதற்கு மறுநாள் (29-ந்தேதி) 2,705 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று இந்த எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. நேற்றைய தினசரி பாதிப்பு 2,689 ஆக உள்ளது.

சென்னையில் உள்ள அனைத்து மண்டலங்களிலும் குணம் அடைபவர்களின் எண்ணிக்கை சதவீதமும் வேகமாக உயர்ந்து வருகிறது. ஆனால் அம்பத்தூர், சோழிங்கநல்லூர் மண்டலங்களில் மட்டும் குறைந்த அளவிலேயே கொரோனாவில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை பதிவாகி வருகிறது. இந்த 2 மண்ட லங்களில் 2.4 சதவீதம் அளவுக்கே கொரோனா நோயாளிகள் அதில் இருந்து மீண்டு வருகிறார்கள்.

மற்ற மண்டலங்களில் 8.3 சதவீதம் அளவுக்கு குணம் அடைபவர்களின் எண்ணிக்கை உள்ளது.

கொரோனா வைரஸ்

சென்னையை போன்று வெளி மாவட்டங்களிலும் கடந்த ஒரு வாரமாக கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

கடந்த 26-ந்தேதி அன்று சென்னையில் 3,561 பேர் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் நேற்று இந்த எண்ணிக்கை ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து இருக்கிறது. சென்னையில் நேற்றைய தினசரி பாதிப்பு 2,689 ஆகும்.

சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் (ஈரோட்டை தவிர) கொரோனா வேகமாக குறைந்து வருகிறது. கோவையில் கடந்த 26-ந்தேதி 4,268 ஆக இருந்த தினசரி பாதிப்பு 3,537 ஆக குறைந்து உள்ளது. திருப்பூரில் 1,880 ஆக தினசரி தொற்று 1,096 ஆக சரிந்துள்ளது.

திருச்சியில் கடந்த வாரம் 1,715 ஆக இருந்த பாதிப்பு 1,128 ஆகவும், மதுரையில் 1,538 ஆக தினசரி பாதிப்பு 792 ஆகவும் குறைந்து இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,302 ஆக இருந்த தினசரி தொற்று 1,194 ஆக சரிந்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் பல மடங்கு குறைந்து இருக்கிறது. அங்கு கடந்த 26-ந்தேதி 1,198 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் நேற்று 597 பேருக்கே நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூரில் 1,181 ஆக இருந்த தினசரி தொற்று எண்ணிக்கை 887 ஆகவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,117 ஆக தினசரி பாதிப்பு 912 ஆகவும், தஞ்சையில் 995 ஆக இருந்த பாதிப்பு 786 ஆகவும் குறைந்து இருக்கிறது.

இதே போன்று மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தினசரி பாதிப்பு 1000-க்கும் குறைவாகவே உள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த 24-ந்தேதியில் இருந்து தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை (ஜூன் 1-ந்தேதி) முதல் வருகிற 7-ந்தேதி வரையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

இந்த கால கட்டத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்காது என்பதால் கொரோனாவின் தாக்கம் அடுத்த ஒரு வாரத்தில் மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அதே நேரத்தில் ஈரோட்டில் மட்டும் நோயின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்படுகிறது. மற்ற மாவட்டங்களில் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் கொரோனாவின் தாக்கம் பெருமளவு குறைந்து இருக்கும் நிலையில் ஈரோட்டில் மட்டும் பாதிப்பு குறையாமலேயே இருக்கிறது.

கடந்த 26-ந்தேதி அன்று அங்கு தினசரி 1,642 ஆக இருந்தது. அது நேற்று 1,784 ஆக உயர்ந்துஇருக்கிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவே அதிகபட்ச பாதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.