வெளிநாட்டு தடுப்பூசிகளை அனுமதிக்கும் நடைமுறை எளிதானது – மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அறிவிப்பு

0
488

வெளிநாட்டு தடுப்பூசிகளை பயன்பாட்டுக்கு அனுமதிக்கும் நடைமுறையை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் எளிமைப்படுத்தி உள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

உள்நாட்டில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் மட்டும் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தடுப்பூசிகளில் ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மட்டும் அங்கீகாரம் பெற்றுள்ளது.

அதே நேரத்தில் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்ட் ஜான்சன் உள்ளிட்ட தடுப்பூசிகளை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இவற்றை இறக்குமதி செய்வதற்கு முன்னர் இந்தியாவில் இவற்றைப்பயன்படுத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி வழங்க வேண்டும்.

இந்தநிலையில் வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அனுமதி அளிக்கும் நடைமுறையை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் எளிமைப்படுத்தி இருக்கிறது.

குறிப்பாக இந்த தடுப்பூசிகளின் ஒவ்வொரு தொகுதியையும் பயன்பாட்டுக்கு அனுப்புவதற்கு முன் கசவுலியில் (இமாசலபிரதேசம்) உள்ள மத்திய மருந்துகள் ஆய்வுக்கூடத்தில் பரிசோதிக்கும் தேவையை இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் ரத்து செய்துள்ளது.

பைசர், சிப்லா நிறுவனங்கள் தடுப்பூசிகளை இந்தியாவுக்கு சப்ளை செய்வதற்கு நடத்திய பேச்சுவார்த்தையின்போது இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்தன. இந்த நிலையில்தான் அதை ஏற்று இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் கூறியதாவது:-

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துநிர்வாகம், ஐரோப்பிய மருந்துகள் முகமை, இங்கிலாந்தின் மருந்துகள் மற்றும் சுகாதார பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம், ஜப்பானின் மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்கள் முகமை ஆகியவற்றின் ஒப்புதலைப் பெற்ற அல்லது உலக சுகாதார நிறுவனத்தின் அவசர கால பயன்பாட்டு பட்டியலில் இடம் பெற்றுள்ள தடுப்பூசிகள் ஏற்கனவே பல கோடி பேருக்கு போடப்பட்டுள்ளன. எனவே வெளிநாட்டு தடுப்பூசிகளின் ஒவ்வொரு தொகுதியையும் கசவுலியில் உள்ள மத்திய ஆய்வுக்கூடத்தில் பரிசோதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் இந்த தடுப்பூசிகளை முதலில் போட்டுக்கொள்ளும் 100 பயனாளிகளை தொடர்ந்து 7 நாட்களுக்கு மதிப்பீடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.