வெளிநாட்டுப் படங்களுக்குத் தடை; மீறினால் மரணதண்டனை – அதிரடி காட்டும் கிம் ஜாங் உன்

0
480

சில தினங்களுக்கு முன்பு, வடகொரியாவின் தலைநகரான பியோங்யாங்கில் தான் லீ என்ற இளைஞருக்கு சுமார் 500 வட கொரியர்கள் மத்தியில் மரண தண்டனை மிகக் கொடூரமாக நிறைவேற்றப்பட்டது.

உலகமே தினம் தினம் கொரோனா ஏற்படுத்திவரும் கோரத்தைக் கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடைமுறைகளையும், கடுமையான விதிகளையும் பின்பற்றி ரும் சூழலில் ‘எங்கள் நாட்டில் ஒருவர்கூட கொரோனாவால் பாதிக்கப்படவில்லை!’ என்று தில்லாகக் கூறிக்கொண்டு, வழக்கம்போல் உலக நாடுகளின் கவனத்தைத் தனது புதுப்புதுச் சட்டங்களின் மூலம் வடகொரியாவின் பக்கம் ஈர்த்திருக்கிறார் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.

என்ன நடக்கிறது அங்கே?!
சில தினங்களுக்கு முன்பு, வட கொரியாவின் தலைநகரான பியோங்யாங்கில் தான் லீ என்ற இளைஞருக்கு சுமார் 500 வடகொரியர்கள் மத்தியில் மரண தண்டனை மிகக் கொடூரமாக நிறைவேற்றப்பட்டது. காரணம், அவர் வெளிநாட்டுத் திரைப்படங்களின் சி.டி-க்களை வட கொரியாவில் கள்ளச்சந்தையில் விற்றார் என்பதே! ‘இதற்கு எதற்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்?’ என்று தோன்றினால் அந்நாட்டின் சட்ட விதிகள் அவ்வாறு அமைக்கப்பட்டிருப்பதுதான் காரணம்.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது சர்வாதிகாரப் போக்கால் உலக நாடுகள் அனைத்திலும் அறியப்படுபவர். அவ்வப்போது சைலன்ட் மோடில் போவது, பிறகு மீண்டும் தனது அதிரடி ஆட்டத்தை ஆரம்பிப்பது என சர்வதேச ஊடகங்களின் எவர் கிரீன் டிரெண்டிங் மெட்டீரியல் இவர்தான். வடகொரியாவை பொறுத்தவரையில் அங்கு இணையதளம் கிடையாது, சமூக வலைதளங்கள் கிடையாது, தொலைக்காட்சி சேனல்களிலும் மிகவும் கட்டுபாடுகளுடன் கூடிய குறைவான சேனல்கள் மட்டுமே இன்றும் இயங்கிவருகின்றன. நாட்டின் ஒவ்வொரு நகர்வும் அதிபர் கிம் ஜாங் உன்னின் மிகக் கடுமையான கட்டுப்பாட்டில்தான் இருந்து வருகிறது. மக்கள் எந்தவிதமான முற்போக்கு எண்ணங்களாலும், அயல்நாட்டுச் சிந்தனைகளாலும் ஆட்கொண்டுவிடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக இருக்கிறார். மீறி அதில் ஈடுபடுவோருக்கே இந்தக் கொடூரமான தண்டனைகள் வழங்கப்பட்டுவருகின்றன.

சமீபத்தில் இறுக்கமான ஜீன்ஸ்களையும், அயல்நாட்டு டீ- ஷர்ட்களையும் அணியக் கூடாது என செக் வைத்தார். அதேபோல், வெளிநாட்டு கலாசாரத்தை ஒட்டிய அலங்காரம், ஹேர் ஸ்டைல், மூக்குத்தி அணிவது உள்ளிட்டவற்றுக்குத் தடை விதித்தார். அதைத் தொடர்ந்து, தற்போது வெளிநாட்டு படங்கள் மற்றும் வெப்-சீரீஸ்களைப் பார்க்க தடை விதித்துள்ளார். மீறிப் பார்ப்பவர்கள் பிடிபட்டால் அவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு சிறைவாசம் மற்றும் அதை அதிக அளவில் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இவை எல்லாவற்றையும் கண்காணிக்கத் தனிக்குழு ஒன்றையும் அமைத்துள்ளார்.

வட கொரியாவும் வெளிநாட்டுத் திரைப்படங்களும்
வடகொரிய மக்கள் உலக நடவடிக்கைகளிலிருந்து தனித்தே வாழ்ந்துவருவதால், அவர்களுக்குப் பொழுதுபோக்கு அம்சம் மிகவும் குறைவே. சினிமா போன்ற எவற்றுக்கும் அங்கு அனுமதியில்லை. இதனால், சீனா மற்றும் தென் கொரியாவின் சினிமா, வெப் சீரீஸ்களின் சிடிக்களை சீன எல்லையின் வழியாக மறைமுகமாகக் கொண்டுவந்து அதை வாங்கிப் பார்ப்பார்கள்.

வட கொரியா: வெளிநாட்டுப் படங்களுக்குத் தடை; மீறினால் மரணதண்டனை – கிம் ஜாங் உன் அதிரடி… காரணம் என்ன?
சில சமயங்களில், இதைப் பாதுகாப்பாக எடுத்துவர ரகசியமான பாஸ்வேர்டுகள் மற்றும் குறிப்பிட்ட சாதனங்களில் மட்டும் இயங்கும் வகையில் இதைக் கொண்டு வந்து மக்கள் ரகசியமாக சினிமாவைப் பார்த்துள்ளனர். இதற்கெல்லாம் முட்டுக்கட்டை போடும்விதமாக அமைந்துள்ளது அதிபர் கிம்மின் புதிய சட்டங்கள். இந்தச் சட்டங்களின் அடிப்படையில்தான் தான் லீக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கான விதை கடந்த 2002-ம் ஆண்டே போடப்பட்டுவிட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். – Source: Vikatan