பூனை வளர்ப்பவர்கள் உஷார்: செல்லப்பிராணிகளுக்கு கொரோனா வருமா?

0
1040

சீனாவின் உகான் நகரத்தில் தோன்றி உலகையே ஆட்டி படைக்கும், கொரோனாவைரஸ் பெருந்தொற்று, விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. ஐதராபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் வளர்க்கப்படும் சிங்கங்கள் கொரோனா தொற்றுக்கு ஆளானதாக தகவல்கள் வெளியாகின.

இதனை தொடர்ந்து சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கிட்டத்தட்ட 13 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சிங்கங்களுக்கு எப்படி தொற்று பரவியது? இதுபோல் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் கொரோனா பரவுமா? என சில சந்தேகங்கள் எழுகின்றன.

மண்டல இணை இயக்குனர் விளக்கம்

இதுகுறித்து கால்நடை பாரமரிப்புத்துறை மதுரை மண்டல இணை இயக்குனர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் கூறியதாவது:-

கொரோனா வைரஸ், விலங்குகளை பொறுத்தவரையில் எல்லா விலங்குகளையும் தாக்காது. குறிப்பாக பூனை இனத்தை சேர்ந்த பூனை, புலி, சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளை எளிதில் தாக்கும்.

கொரோனா வைரசால் எளிதில் தாக்கும் விலங்குகளின் பட்டியலில் இவைதான் முதல் இடத்தில் இருப்பதால், உடனடியாக பாதிப்புக்குள்ளாகின்றன. இதுபோல், கீரி, எலி, குரங்கு உள்ளிட்ட இனங்களிலும் குறிப்பிட்ட சில வகையை கொரோனா வைரஸ் தாக்குகிறது. ஒரு விலங்கிடம் இருந்து இன்னொரு விலங்கிற்கு இந்த வைரஸ் விலங்குகள் மூலம் பரவாது. ஆனால், பூனையினங்களில் மட்டும், ஒரு விலங்கிடம் இருந்து இன்னொரு விலங்கிற்கு பரவும் தன்மை இருக்கிறது. இதன் விளைவாகவே வண்டலூர் உயிரியல் பூங்காவில் அடுத்தடுத்து சிங்கங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

விலங்குகள், தும்மும்போது, இருமும்போது வைரஸ் கலந்த நீர் துகள்கள் காற்றில் பரவி ஒரு சிங்கத்திடம் இருந்து மற்றொரு சிங்கத்திற்கு பரவி உள்ளது..

நாய், பூனை, கிளி, கோழி, ஆடு, மாடு போன்றவை வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள். இதில் நாய், கிளி, பன்றி, கோழி, வாத்து, வான்கோழி, பிராய்லர்கோழி இனங்களுக்கு இந்த நோய் தொற்று வருவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு என்றே ஆய்வுகள் கூறுகின்றன. அவற்றுக்கு இயற்கையாகவே இந்த வைரசை எதிர்க்கும் ஆற்றல் இருக்கிறது.

இதுபோல், செம்மறி ஆடு, வெள்ளாடுகளுக்கு பரவும் வாய்ப்பும் மிகக்குறைவு.

தற்போது அதிகமாக பூனையினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருவதால், வீடுகளில் செல்லப் பிராணியாக பூனையை வளர்த்தால் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பூனைக்கு ஒரு விசித்திர குணம் உண்டு. தன்னை எப்போதும் சுத்தமாக வைத்திருக்கும். அதேபோல் சுத்தமான இடத்தில்தான் வசிக்கும். இதனால்தான் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் பூனைகளை அதிகமாக வளர்க்கிறார்கள். இந்தியாவிலும் அதிகமாக வளர்க்கப்படுகிறது. ஆனால், காற்றில் உள்ள சில வைரஸ்களால் எளிதில் பூனைகள் நோய்வாய்ப்படவும் செய்கின்றன. அதில் ஒன்றுதான் கொரோனா.

வீட்டில் பூனைகள் வளர்த்தால், மனிதர்களிடம் இருந்து அதற்கு நோய் பரவ வாய்ப்புண்டு. பூனைகள் அக்கம்பக்கத்து வீடுகளுக்கும் செல்லும். எனவே பக்கத்து வீட்டில் கொரோனா தொற்றுக்கு ஆளான நபர் பூனையை எடுத்து அதிகமாக கொஞ்சினால் பூனைக்கு தொற்று ஏற்படலாம். பின்னர் அந்த பூனை தன்னை வளர்க்கும் எஜமானர் வீட்டுக்கு வந்து, அவர்களுடனும் பழகி நோயை பரப்ப வாய்ப்பு இருக்கிறது. எனவே கொரோனா தொற்று காலம் முடியும் வரை பக்கத்து வீடுகளுக்கு பூனைகளை விடாமல் பராமரிப்பது முக்கியமான ஒன்று.

வேறு வழிகளில் வீட்டு விலங்குகளுக்கு கொரோனா ஏற்பட வாய்ப்பு இல்லை. வீட்டு விலங்குகளை வளர்க்கும் இடங்களை கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும். செல்லப்பிராணிகளுக்கு வெளிநாடுகளில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் இருக்கிறது. அதுபோல், இந்தியாவிலும் வரவேண்டும்.

செல்லப் பிராணிகளை வளர்த்து வரும் நபர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளானால் செல்லப்பிராணிகளிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும். ஒருவேளை அதனுடன் பழகி இருந்தால் மனிதர்களை போன்று அந்த பிராணிகளையும் தனிமைப்படுத்திட வேண்டும்.

மனிதர்களை போன்றுதான் நோய் அறிகுறிகள் விலங்குகளுக்கும் இருக்கும் என சொல்ல முடியாது. இதில் வித்தியாசங்கள் உண்டு. பொதுவாக தும்மல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம், மூக்கு, கண்களில் நீர் வடிதல், காய்ச்சல், சோர்வு, வாந்தி உள்ளிட்டவை இதற்கான அறிகுறிகளாகும்.

ஒருவேளை செல்லப்பிராணிகளுக்கு இதில் ஏதாவது அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகலாம். மனிதர்களை போன்று அறிகுறிகள் இல்லாமலும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அறிகுறிகள் தென்படும்பட்சத்தில், அந்த விலங்குகளிடம் இருந்து சளி மாதிரிகள் சேகரித்து பரிசோதிக்கலாம். ஆனால், போபால், ஐதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு அனுப்பி வைத்து அங்குதான் எந்தமாதிரியான பாதிப்பு இருக்கிறது என்பதை உறுதி செய்கிறார்கள்.

கொரோனா முதல் அலையில் இருந்த வைரசும், தற்போது 2-வது அலையில் பரவிய வைரசும் உருமாற்றத்தில் வேறுபாடானவை. இதனால்தான் 2-வது அலை வைரஸ் மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு பரவி இருக்கிறது.