கொரோனா ஊரடங்கில் மக்களிடையே பிரியாணி மோகம் அதிகரிப்பு

0
354

கொரோனா நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவரவும், அதன் பரவல் சங்கிலியை துண்டிக்கவும் தமிழக அரசு ஊரடங்கு என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறது. கடந்த ஒரு வாரமாக மருந்து கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கின்றன.

முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால், ஒரு வாரத்துக்குத் தேவையான மளிகைப்பொருட்கள், காய்கறிகளை வாங்கி வைத்துக்கொள்ள கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அனுமதிக்கப்பட்டனர். என்னதான் மளிகைப்பொருட்கள், காய்கறிகளை ஒருவாரத்துக்கு வாங்கி சேமித்து வைத்தாலும், இறைச்சியை அவ்வாறு சேமித்துவைக்க முடியாது என்பதால் அசைவப் பிரியர்களின் ஆசைக்கு இந்த ஊரடங்கு தடை விதித்துவிட்டது.

ஆனால் ஒரு கதவு அடைபட்டால் மறு கதவு திறக்கும் என்பது போல, அசைவ பிரியர்களின் வேட்கையை தணிக்கும்வகையில் ஓட்டல்களில் அசைவ உணவு வகைகள் விற்கப்படுகின்றன. அசைவ பிரியர்கள் அதன் மூலம் தங்களுடைய ஆசையை நிவர்த்தி செய்கின்றனர்.

மேலும், உடலில் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க புரத உணவு வகைகளை சாப்பிட பலர் பரிந்துரைக்கின்றனர். அந்தவகையிலும் ஓட்டல்களில் சிக்கன் பிரியாணி உள்பட கோழிக்கறி வகைகளை அதிகம் பேர் கேட்டு வாங்குவதாக ஓட்டல்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கும் ஓட்டல்களுக்கு சென்றோ அல்லது சொமாட்டோ, ஸ்விகி ஆகியவற்றின் மூலமாகவோ பார்சல்களாக வாங்கிச்செல்கின்றனர். இதனால் மாலை நேரங்களில் அசைவ ஓட்டல்களில் ஓரளவு கூட்டத்தைக் காண முடிகிறது.

ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை என்பதால், ஓட்டல்களுக்கு முன்பு கயிறு கட்டியோ அல்லது டேபிள் போட்டோ வாடிக்கையாளர்களை நிற்கவைத்து பார்சல்களை வழங்கி அனுப்பி வைக்கின்றனர். வாடிக்கையாளர்களுடன், ஆன்லைன் உணவு வினியோக ஊழியர்களும் சமூக இடைவெளியை பின்பற்றி பார்சல்களை வாங்கிச்செல்வதை பார்க்க முடிகிறது.