பட்டுப் பாவாடையில் பளிச்சிடும் அழகு

0
690

காலம் மாறினாலும் பட்டுப் பாவாடையில் பெண்களுக்கு இருக்கும் ஆசை குறையவில்லை. அதனால் டீன்ஏஜ் பெண்களையும் கவரும் விதத்தில் விதவிதமான வடிவமைப்புகளில் பட்டுப்பாவாடைகள் தயாராகின்றன. விழாக்காலங்களிலும், பண்டிகை நாட்களிலும் சிறுமிகள் பட்டுப் பாவாடையுடன் உலா வருவதை பார்க்கவே அழகாக இருக்கும். பளிச்சென்ற நிறத்தில் ஜரிகை வேலைப்பாடுகள் கொண்ட பட்டுப் பாவாடை அணிந்து அழகுக் குழந்தைகள் நடந்துசெல்லும்போது மின்னல்வெட்டியதுபோல் இருக்கும்.

பாரம்பரிய டிசைன்களும், நிறக்கலவைகளுமே பட்டுப் பாவாடைக்கு அழகு சேர்க்கிறது. பொருத்தமான ஜாக்கெட்டுகள் அதற்கு கூடுதல் அழகு சேர்க்கும். சிவப்பு பட்டில் தயாரான மேலாடைக்கு, கை பகுதியில் ‘பப்’வைத்து அதன் இறுதியில் சூரிய கதிர்கள் ஜொலிப்பதுபோல் ஜரிகை வேலைப்பாடு செய்திருந்தால் அது கண்களை பறிக்கும்.

இப்போது பட்டுப் பாவாடைக்கான ஜாக்கெட்டில் டிசைனர் மெட்டீரியலைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். கலம்காரி, டிஜிட்டல், பத்திக், காயின் டாட், இக்காத் போன்ற பல வகை பிரிண்ட் மெட்டீரியல்களை பட்டுப் பாவாடை- ஜாக்கெட்களில் பயன்படுத்துகிறார்கள். ஜாக்கெட் துணி பாவாடைக்கு பார்டர் ஆகிவிடுகிறது. ஸ்கர்ட்டுக்கு பதில் பலாசோ பயன்படுத்துவது புதிய பேஷனாக உருவாகிக்கொண்டிருக்கிறது. இதற்கான ஜாக்கெட் ‘க்ரோப் டாப்’ போன்றிருக்கும். இப்போது பட்டுப் பாவாடை- ஜாக்கெட்டுடன் தாவணியையும் இணைத்து தருகிறார்கள். டீன்ஏஜ் பெண்களை இது வெகுவாக கவர்கிறது.

அடர்த்தியான நிறங்களை கொண்ட பட்டுப்பாவாடைகளே முந்தைய ஸ்டைலாக இருந் தது. அந்த பாரம்பரிய ஸ்டைல் இப்போதும் பெண்களை ஈர்க்கத்தான் செய்கிறது. பச்சை- மஞ்சள், நீலம்- சிவப்பு, மெருன்- நீலம், நீலம்-பிங்க், பிங்க்- கிளிப்பச்சை போன்றவைகளே அதற்கான கலர் காம்பினேஷன்களாக இருக்கின்றன. பிராக்கெட் ஜாக்கெட்களுக்கு பாவாடையின் பார்டரில் இருந்து வெட்டி எடுத்த துண்டுகளை ‘ஸ்லீவ்’ ஆக பயன்படுத்துகிறார்கள். அதன் நெக்லைனில் எம்ப்பிராய்டரி, ஸ்டோன் ஒர்க் போன்றவைகளை செய்கிறார்கள்.

3 முதல் 14 வயது வரையுள்ள சிறுமிகளுக்கு ஆன்லைனில் ரெடிமேடு பட்டுப்பாவாடைகளை வாங்கலாம். சில்க் காட்டன் மெட்டீரியலில் தயாரான லைனிங் செய்த டாப்பும், பேன்சி நெக்கும், எம்ப்ராய்டரிங் வேலைப்பாடுகளும் அதில் இருக்கும். ஆன்லைனில் வாங்கும்போது நம்பகமான பிராண்ட்களை தேர்ந்தெடுப்பதே சிறந்தது. துணியின் தரத்தையும், டிசைனையும் தேர்ந்தெடுத்துவிட்டால் எந்த இணையதளத்தில் இருந்து அதனை வாங்கவேண்டும் என்று தீர்மானிக்கவேண்டும். குறைந்தது ஐந்து வெப்சைட்டுகளையாவது பார்த்துவிட்டு நிதானமாகவே ஆர்டர் செய்யவேண்டும். ரிட்டர்ன் செய்வது, எக்சேஞ்ச் செய்வது போன்ற சவுகரியங்கள் இருக்கவேண்டும்.

துணியின் தரத்தை பற்றிய விவரங்களையும் வாசித்து பார்க்கவேண்டும். துல்லியமான அளவில் ஒருபோதும் ஆர்டர்கொடுக்கக்கூடாது. துல்லிய அளவின் அடுத்த சைஸ்க்கு ஆர்டர் கொடுப்பதே சிறந்தது. துல்லிய அளவில் ஆர்டர் கொடுத்து வாங்கினால் அது இறுக்கமாக தோன்றலாம். சற்று அளவு அதிகமான பட்டுப்பாவாடை என்றால் அதன் அளவை சுருக்குவது மிக எளிது.

மெலிந்து உயரமாக தோன்றும் பெண்கள் குறுக்கான கோடுகளை கொண்ட பிரிண்டுகள் அமைந்த டிசைன்களை வாங்கக்கூடாது. அகலமான பார்டரும், பெரிய பூக்களை கொண்ட டிசைன்களும் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். பாவாடைக்கும்- ஜாக்கெட்டுக்கும் கான்ட்ராஸ்ட் நிறங்களை தேர்ந்தெடுங்கள். மெலிந்த உடல்வாகு கொண்டவர்களுக்கு பாவாடையில் அதிக சுருக்கங்கள் வைத்துக்கொள்ளலாம். ஜாக்கெட்டுகளில் ‘பப் ஸ்லீவ்’ வைத்துக்கொள்ளலாம். குண்டான உடல்வாகு கொண்டவர்களுக்கு சிறிய பிரிண்டுகளை கொண்ட டிசைன்கள் பொருத்தமாக இருக்கும். சிறிய செக் டிசைன்களும் அவர்களுக்கு கூடுதல் அழகு தரும்.