சீனாவில் முதல் முறையாக உருமாறிய பறவைக்காய்ச்சல்!

0
446

சீனாவில் முதல் முறையாக உருமாறிய பறவைக்காய்ச்சலால் மனிதர் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரசின் அலைகள் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், அங்கு உருமாறிய பறவைக்காய்ச்சலால் 41 வயது மனிதர் வருவர் முதல்முறையாக பாதிக்கப்பட்டுள்ளார். அவர் ஜியாங்சு மாகாணத்தின் ஜென்ஜியாங் நகரை சேர்ந்தவர் ஆவார்.

தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்படும் நிலையில் உள்ளதாகவும் சீன அரசின் சிஜிடிஎன் டெலிவிஷன் கூறி உள்ளது.

இது தொடர்பாக சீன சுகாதார அதிகாரிகள் கூறும்போது, இந்த பறவைக்காய்ச்சல், கோழிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியதாகும். இது தொற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பு மிகவும் குறைவு என தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டுள்ள நபர் ‘எச்1 ஓஎன் 3’ ஏவியன் இன்புளூவென்சா வைரஸ் பாதிப்புக்கு கடந்த 28-ந் தேதி ஆளானதாக சீன தேசிய சுகாதார கமிஷன் கூறுகிறது. அதே நேரத்தில் அவருக்கு எவ்வாறு அந்த வைரஸ் தாக்கியது என்பது குறித்து கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ஆனால் இதுவரை உலகில் வேறு யாரும் இந்த வகை பறவைக்காய்ச்சலுக்கு ஆளானது இல்லை என்று சீன தேசிய சுகாதார கமிஷன் கூறுகிறது.

இது கோழிப்பண்ணையில் இருந்து உருவாகக்கூடிய வைரஸ் என்றும், ஒப்பீட்டளவில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தாத வகை என்றும், பெரிய அளவில் பரவுவதற்கான ஆபத்து குறைவு என்றும் சொல்லப்படுகிறது.

இருப்பினும் இந்த தகவல்கள் உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளன.