பாகிஸ்தானில் அடித்து நெருக்கப்பட்ட இந்து ஆலயம்! 8 வயதுச் சிறுவனால் வெடித்தது கலவரம்.

0
317

பாகிஸ்தானின் கிழக்கு பஞ்சாப் மாகாண நகரில் முஸ்லிம் கும்பல் ஒன்றினால், இந்து ஆலயம் ஒன்று மோசமாக தாக்கி சேதப்படுத்தப்பட்ட நிலையில் அங்கு இராணுத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமய பாடசாலை ஒன்றை அவமதித்ததாக குற்றம்சாட்டப்பட்ட எட்டு வயது இந்து சிறுவன் ஒருவனுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதை அடுத்து ரஹிம் யார் கான் மாவட்டத்தின் போக் என்ற சிறு நகரிலேயே கலவரம் வெடித்துள்ளது.

இதன்போது கோவிலின் சிலைகள் தகர்க்கப்பட்டு பிரதான வாயில் கதவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

அந்த சிறுவனை கைது செய்யும்படி அந்த கும்பல் கோரி உள்ளது.

குறித்த சமய பாடசாலையான மத்ரசாவில் உள்ள விரிப்பு மீது சிறுநீர் கழித்ததாகவே அந்த சிறுவன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்க முடியுமான மதநிந்தனை குற்றச்சாட்டே அந்த சிறுவன் மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்திருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்கும்படி பஞ்சாப் மாகாண பொலிஸ் தலைவருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து 50 சந்தேக நபர்களின் பெயர் பட்டியலை பஞ்சாப் பொலிஸார் வெளியிட்டிருப்பதோடு துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.